Monday, February 13, 2012

எதிர் காலத்தில் லினக்ஸின் பயன்பாடு

சென்ற ஆண்டு பெர்சனல் டெஸ்க் டாப் கம்ப்யூட்டருக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டம் பிரிவில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இதில் இயங்கும் அனைத்து நிறுவனங்களும் கொண்டு வந்த மாற்றங்கள், அறிவித்த புதிய திட்டங்கள் மக்களிடையே நிறைய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தின.


குறிப்பாகச் சொல்வ தென்றால், மொபைல் சாதனங்களுக்கென வடிவமைக்கப்பட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டங்களின் சிறப்புகளை, பெர்சனல் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் கொண்டு வர பல நிறுவனங்கள் முயற்சி செய்து வெற்றியும் பெற்றன.
இதனைக் கண்ட மக்கள், கிடைக்கும் சிஸ்டத்திற்கு நாம் வளைந்து கொடுக்காமல், நாம் விரும்பும் வகையில் செயல்படக் கூடிய சிஸ்டம் இருக்குமா என்று தேடத் தொடங்கினார்கள்.
அவர்களுக்கு லினக்ஸ் கை கொடுத்தது. இந்த ஆண்டில் லினக்ஸ் சிஸ்டம் நிச்சயம் இன்னும் அதிகமாகப் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம். இதற்கான காரணங்களை இங்கு காணலாம்.
1. பலவகைத் தன்மை:
லினக்ஸ் பற்றிக் குறிப்பிடுகையில், அதனை விரும்பாதவர் கள், அந்த சிஸ்டம் பல வகைகளில் துண்டு துண்டாக உள்ளது என்பார்கள். சொல்லப் போனால், அதுதான் லினக்ஸ் சிஸ்டத்தின் வலுவான சிறப்பு என்று சொல்லலாம்.
லினக்ஸ் டிஸ்ட்ரிபியூட்டர்கள் என்று சொல்லப்படுபவர்கள், பயனாளர்களின் தேவைகளை இலக்காகக் கொண்டு லினக்ஸின் வெவ்வேறு படிவங்களை வடிவமைக்கின்றனர்.
மின்ட் மற்றும் உபுண்டு (Mint / Ubuntu) போன்றவை பயன்பாட்டினை முன்னிறுத்துகின்றன. பெடோரா (Fedora) போன்றவை பாதுகாப்பி னையும், நிறுவனங்களின் தேவைகளையும் முன்னிறுத்தியுள்ளன.
2. தனிநபருக்கேற்றவை:
லினக்ஸ் சிஸ்டம் பலவகையான பதிப்புகளில் கிடைப் பதனால், நம் செயல்பாடுகளின் தன்மைக் கேற்ப நமக்கு வேண்டிய பதிப்பினைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
உபுண்டு தரும் யூனிட்டி டெஸ்க்டாப் பிடிக்க வில்லையா? மிண்ட் தரும் ஜிநோம் 3 பிடிக்கவில்லையா? இவற்றை விடுத்து மற்றவற்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். இவற்றை வடிவமைத்தவர் யாரும், இந்த சிஸ்டத்தினை நீங்கள் இப்படித்தான் பயன்படுத்த வேண்டும் என எந்த வரையறையும் விதிப்பதில்லை.
3. திறவூற்று பெட்டகம்:
லினக்ஸ் ஒரு திறவூற்றுப் பெட்டகம் (Open Source). ஓப்பன் சோர்ஸ் என அழைக்கப்படும் வகையினைச் சார்ந்தது. இதன் மூலக் குறியீட்டுக்கு யாரும் சொந்தம் கொண்டாடுவது இல்லை.
யார் வேண்டு மானாலும் இதனைத் தங்கள் தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம். மிகப் பெரிய அளவிலான அப்ளிகேஷன்களின் தொகுப்பு இது என இதனைக் கூறலாம். இதனை யார் வேண்டுமானாலும் மாற்றிக் கொண்டு பயன்படுத்தலாம்.
4. இலவசம்:
லினக்ஸ் சிஸ்டத்தினைப் பெற்று பயன்படுத்த எந்தக் கட்டணமும் இல்லை. வர்த்தக ரீதியாகப் பயன்படுத்த, தொடர்ந்து தனிக் கவனத்துடன் கூடிய சப்போர்ட் தேவை என்றால் மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும்.
தனி நபர்கள் மற்றும் பிற நிறுவன சப்போர்ட் வேண்டாதவர்கள் எந்தக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. திறவூற்றா கவும், இலவசமாகவும் இருப்பது லினக்ஸ் சிஸ்டத்தின் இரு தனி சிறப்புகளாகும்.
5. நம்பிக்கை தன்மை: இந்த சிஸ்டத்தினைச் சார்ந்து பயன்பாட்டினை தைரியமாக மேற்கொள்ளலாம். குறிப்பாக சர்வர்கள் இயக்கத்தில், லினக்ஸ் மிக அதிகமாக விரும்பப்படும் ஓர் இயக்கமாகும். லினக்ஸ் பயன்படுத்துகையில், கம்ப்யூட்டர் இயக்கம் முடங்கிப் போகுமோ என்ற கவலை இல்லாமல் இயங்கலாம்.
6. கூடுதல் வேகம்: மற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் இயங்க, ஹார்ட்வேர் தேவை மிக அதிகமாக இருக்கும். ஆனால், லினக்ஸ் இயங்க அந்த அளவிற்கு ஹார்ட்வேர் தேவை இருக்காது. அதே நேரத்தில், இயக்க செயல் வேகம் மற்றவற்றைக் காட்டிலும் கூடுதலாகவே இருக்கும்.
7. பாதுகாப்பானது: வைரஸ் மற்றும் பிற மால்வேர் தொகுப்புகள் எப்போதும் குறி வைப்பது விண்டோஸ் இயக்கத்தினைத் தான். ஏனென்றால், அதிகம் பயன் படுத்தப்படுவது விண்டோஸ் தான். ஆனால், லினக்ஸ் உலகில் இது மிக, மிகக் குறைவு. மேலும் கூடுதல் பாதுகாப்பு வழங்க பல தர்ட் பார்ட்டி புரோகிராம்கள் கிடைக்கின்றன.
8. தேடுதல்கள் தரப்படும்: லினக்ஸ் பொறுத்தவரை அது ஓப்பன் சோர்ஸ் வகையாக இருப்பதால், உலகெங்கும் அதன் ரசிகர்கள், இந்த இயக்கம் சார்ந்த பல தீர்வுகளைத் தந்த வண்ணம் உள்ளனர். பல ஆயிரக்கணக்கான உதவிக் குழுக்கள் உள்ளன. கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும் என்றபடி, எந்த பிரச்னை என்றாலும் நொடியில் உங்களுக்குத் தீர்வு இணைய வழியாகக் கிடைக்கிறது.
9. தொடர் முன்னேற்றம்: பல்வேறு குழுக்கள் லினக்ஸ் சிஸ்டம் குறித்து தொடர்ந்து இயங்கி வருவதால், இந்த குழுக்களில் உள்ள வல்லுநர்கள், லினக்ஸ் சிஸ்டத்தினைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகின்றனர். புதிய வசதிகள் அளிப்பதோடு, ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், அவை உடனடியாகச் சரி செய்யப்படுகின்றன. மாதக்கணக்கில் பேட்ச் பைல்களுக்காகக் காத்திருக்க வேண்டியதில்லை.
10. இயைந்த இயக்கம்: லினக்ஸ் மற்ற இடங்களில் இயங்கும் சிஸ்டத்துடன் இயைந்ததாகவே உள்ளது. உலகின் எந்த மூலையில் இயங்கும் லினக்ஸ் சிஸ்டத்துடன் எந்த பதிப்பும் இயைந்து இயங்கும் தன்மை உடையதாகவே உள்ளது. இதனால், எந்தப் பிரச்னையும் இன்றி, உலகளாவிய சிஸ்டம் லினக்ஸ் மூலம் நமக்குக் கிடைக்கிறது.
இந்த சிறப்புகள், லினக்ஸ் சிஸ்டத்தினை கம்ப்யூட்டர் இயக்கத்தின் உற்ற தோழனாகக் காட்டுகின்றன. இதுவே தொடர்ந்து இதன் பயனாளர்களின் எண்ணிக்கையினை உயர்த்தும் காரணமாக வும் உள்ளது. இந்த ஆண்டில் இந்த உயர்வு சற்று அதிகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.